
படம்: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசி ஆய்வுக்குழு
பிரேஸிலில் கொரோனாத் தடுப்பூசி பரீட்சார்த்த நடவடிக்கையில் பங்கெடுத்திருந்த தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் ஆராய்ந்துள்ள ஒக்ஸ்போர்ட் ஆய்வுக்குழுவினர், பரிசோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் இறுதிக்கட்ட பரிசோதனைகள் பிரித்தானியா, இந்தியா, பிரேஸில், தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த, ரியோ டி ஜெனிரோ நகரைச் சேர்ந்த, 28 வயது தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்ததாக பிரேஸில் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால், குறித்த தன்னார்வலருக்கு ‘ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி’ செலுத்தப்பட்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
குறித்த தடுப்பூசி பரீட்சார்த்த நடவடிக்கையில் பங்கெடுத்த தன்னார்வலர்களில் அரைவாசிப் பேருக்கே ஒக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள் தயாரித்துள்ள தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு வேறு நோய்க்கான தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய தடுப்பூசியின் பலனை சரியாக மதிப்பிடுவதற்காக, என்ன மருந்து தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் இரண்டு குழுவினருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் இன்று தன்னார்வலர் உயிரிழந்த சம்பவத்தை ஆராய்ந்துள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், தங்களின் தடுப்பூசி பரிசோதனை நடவடிக்கையில் ‘பாதுகாப்பு ரீதியான கவலைகள் ஏதும் இல்லை’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.