July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் கட்டுப்பாடுகளை நீக்கி இயல்பு நிலைக்கு திரும்பும் டென்மார்க்!

(Photo : wikipedia)

கொவிட் -19 தொற்று பரவலுக்கு எதிராக அனைத்து உள்நாட்டு கட்டுப்பாடுகளையும் நீக்கிய முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை டென்மார்க் முன்னெடுத்திருந்தது.

விடுதிகளுக்குள் நுழையும் போது இத்திரனியல் தடுப்பூசி அட்டைகளை பயன்படுத்தும் விதிமுறை வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டதோடு, 548 நாட்களுக்குப் பிறகு டென்மார்க் கொவிட் தொற்றுக்கு எதிரான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிக் கொண்டுள்ளது.

டென்மார்க் 12 வயதிற்கு மேற்பட்ட 80% க்கும் அதிகமான மக்களுக்கு 2 டோஸ் கொவிட் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

ஆகஸ்ட் 14 முதல், பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என டென்மார்க் அறிவித்திருந்தது.செப்டம்பர் 1 முதல் இரவு விடுதிகளும் மீண்டும் திறக்கப்பட்டன.

பொதுக் கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன, உணவகங்களுக்குள் அமர்ந்து உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி அட்டைகள் காண்பிக்கப்படுவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டது.

எனினும் முகக்கவசங்களை அணிவது விமான நிலையங்களில் இன்றும் கட்டாயமாக உள்ளது. அத்தோடு மருத்துவர், பரிசோதனை மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிய மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாடு திறக்கப்பட்ட போதும், தேவை ஏற்பட்டால் மீண்டும் மூடப்படலாம் என டென்மார்க்கின் ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸேரன் ரைஸ் பலுடன் கூறியுள்ளார்.