July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீன -அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையே உத்தியோகபூர்வு தொலைபேசி உரையாடல்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குக்கும்,  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையே உத்தியோகபூர்வ தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை காலை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு உரையாடியுள்ளார்.

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான நேரடி தொடர்புகளில் ஏற்பட்டிருந்த இடைவெளி ஏழு மாதங்களின் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரு தலைவர்களும் “போட்டி மோதலில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான இரு நாடுகளின் பொறுப்புகளை பற்றி விவாதித்தார்கள்” என தெரிய வருகின்றது.

இந்த உரையாடல் இரு நாடுகளுக்கிடையிலான போட்டியை பொறுப்புடன் நிர்வகிப்பதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதி என்று ஜோ பைடன் தெளிவுபடுத்தியதாக வெள்ளை மாளிகை மேலும் தெரிவித்துள்ளது.

பொருளாதாரம், உளவு குற்றச்சாட்டுகள் மற்றும் கொவிட் தொற்று உள்ளிட்ட இருதரப்பு மோதல்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு தொடர்ந்தும் பதட்ட நிலையில் உள்ளது.

தொலைபேசி உரையாடல் குறித்து சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா  வெளியிட்டுள்ள அறிக்கையில் “சீனாவும் அமெரிக்காவும் தங்கள் உறவுகளை சரியாக கையாள்வது எதிர்காலம் மற்றும் உலகின் தலைவிதிக்கு முக்கியமானது” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பதவியேற்றதன் பிறகு அவர்களுக்கு இடையேயான 2 வது தொலைபேசி உரையாடல் இதுவாகும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்காக சீன ஜனாதிபதி தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.