July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தலிபான்கள் தமது இடைக்கால அரசை அறிவித்தனர்!

(file photo)

தலிபான்கள் தமது புதிய அரசின் தலைவராக முல்லா ஹசன் அகுந்த்தை அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் தமது இடைக்கால புதிய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் அங்கம் வகிப்பவர்களின் விபரங்களை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளனர்.

முல்லா ஹசன் அகுந்த் தலிபான்கள் இயக்கத்தின் தற்போதைய தலைவரும் மறைந்த நிறுவனர் முல்லா ஒமரின் சகாவும் ஆவார்.

முல்லா அப்துல் கனி பரதர் மற்றும் முல்லா அப்துஸ் சலாம் ஆகியோரை அவரது பிரதிநிதிகளாக நியமித்துள்ளனர்.

தலிபானின் முக்கிய செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் காபூலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹக்கானி அமைப்பின் நிறுவனர் மகன் சராஜுதீன் ஹக்கானி புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லா உமரின் மகன் முல்லா முகமது யாகூப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயுத இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அகுந்த் தலிபான்களின் பிறப்பிடமான கந்தஹாரைச் சேர்ந்தவர் என்று தி நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

இவர் 1996 – 2001 வரை ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் முந்தைய அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்தார்.