July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கினியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு: ஜனாதிபதியை இராணுவம் கைது செய்தது!

Photo: Twitter

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் ஆட்சியை கைப்பற்றியுள்ள, அந்நாட்டு இராணுவம் ஜனாதிபதி ஆல்பா காண்டேவை கைது செய்துள்ளது.

தலைநகா் கோனாக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குகள் புகுந்துள்ள இராணுவத்தினர், அங்கிருந்த ஜனாதிபதியை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அந்நாட்டு அரசத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இராணுவம், ஜனாதிபதி ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தை ஒரு தனி நபரிடம் ஒப்படைக்க இனியும் தாங்கள் விரும்பவில்லை. அரசாங்கத்தை இனி மக்களே வழிநடத்துவார்கள். நாட்டைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு ராணுவ வீரனின் கடமை என அரச தொலைக்காட்சியில் உரையாற்றிய இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கினியா இராணுவத்தின் இந்த செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐநா. பொதுச் செயலாளர் “துப்பாக்கியின் பலத்தால் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இராணுவத்தின் ஒரு பிரிவினரின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கினியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜனாதிபதியின் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சு அறிவிக்கவில்லை.

இந்நிலையில் அங்கு தொடர்ந்தும் பதற்றமான நிலைமை நீடிப்பதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த கினியாவில் 2010 ஆம் ஆண்டில் ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.

தொடா்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்த அவர், கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

எவ்வாறாயினும் அவரின் செயற்பாடுகள் தொடர்பில், மக்களிடையே பெரும் எதிர்ப்புகள் இருந்த நிலையிலேயே இராணுவத்தினர் ஆட்சியை கலைக்க நடவடிக்கையெடுத்துள்ளனர்.