July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சம உரிமையை கோரி காபூலில் பெண்கள் முன்னெடுத்த போராட்டம் தலிபான்களால் முறியடிப்பு!

பெண்களுக்கு எதிராக கடுமையான கோட்பாடுகளை கொண்டுள்ள தலிபான்களிடம் தமக்கான சம உரிமையை கோரி காபூலில் பெண்கள் முன்னெடுத்த போராட்டத்தை தலிபான்கள் முறியடித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, எதிர்வரும் சில நாட்களில் அங்கு தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர்.

எனினும் பெண்கள் அரசாங்கத்தில் இணையலாம் என்றும் , ஆனால் அமைச்சர் பதவிகளை வகிக்க முடியாது என்றும் தலிபான்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து அரசாங்கத்தில் தமக்கான சம உரிமையை கோரி காபூலில் பெருமளவான பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலிபான் அதிகாரிகள் கண்ணீர் புகையை பயன்படுத்தி கலைத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மாளிகைக்கு நடந்து செல்ல முயன்றபோதே இவ்வாறு தம் மீது தலிபான்கள் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஊடகங்களுக்கு கூறியுள்ளனர்.

தமக்கு வேலை செய்யும் உரிமை மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உரிமை வேண்டும் என்று கோரி காபூல் மற்றும் ஹெராட்டில் பெண்கள் பலர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.