July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19 வைரஸ் வகையின் புதிய மாறுபாடான “மு” குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அவதானம்!

ஜனவரி மாதம் கொலம்பியாவில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்ட “மு” எனப்படும் கொரோனா வைரஸ் வகை தடுப்பூசிகளின் செயல்திறனுக்கு எதிராக செயற்படும் அபாயத்தை கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

உலகில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கொவிட் வைரஸ் வகைகளின் 5 ஆவதாக அறியப்படும் இந்த வைரஸூக்கு அறிவியல் பூர்வமாக B .1.621 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் வகையை கண்காணிப்பதாகவும் இதை நன்கு புரிந்து கொள்ள மேலதிக ஆய்வுகள் தேவை என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியது.

“‘மு’ மாறுபாடு நோயெதிர்ப்பு திறனிலிருந்து தப்பிப்பதற்கு சாத்தியமான பண்புகளை அதிமாக கொண்டுள்ளது” என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல் படி, தற்போது அடையாளம் கண்டுள்ள நான்கு கொவிட் -19 வகைகளில் 193 நாடுகளில் ஆல்பா வகையும் மற்றும் 170 நாடுகளில் டெல்டா வகையும் தீவிரமடைந்துள்ளன.

கொலம்பியாவில் கண்டறியப்பட்ட பிறகு, இந்த வைரஸ் மாறுபாடு தென் அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் உலகளாவிய பரவலானது 0.1 விகிதத்திற்கும் குறைவாக உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும், கொலம்பியாவில் இதன் பரவல் 39 வீதமாக பதிவாகியுள்ளது.புதிய வைரஸ் வகைகள் தோன்றுவதில் பரவலான கவலை உள்ளது.ஏனெனில் தொற்று விகிதங்கள் உலகளவில் மீண்டும் அதிகரித்து வருகின்றன.

மிகவும் பரவும் டெல்டா மாறுபாடு-குறிப்பாக தடுப்பூசி போடாதவர்களிடையேயும் வைரஸ் பரவலுக்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட பகுதிகளிலும் அதிகரித்துள்ளது.

கொவிட் -19 உட்பட அனைத்து வைரஸ்களும் காலப்போக்கில் மாறுகின்றன.இவற்றில் சில வைரஸின் பண்புகளை சிறிதளவு கொண்டிருக்கும் அல்லது எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

ஆனால் சில மாறுபாடுகள் வைரஸின் பண்புகளை பாதிப்பதோடு, பரவல் அடையும் திறனும் நோயின் தீவிரம் மற்றும் தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் பிற எதிர் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படும் திறனையும் அதிகமாக கொண்டுள்ளது.

இது போன்ற வைரஸ் மாறுபாடுகளுக்கு எதிராக தொடர்ந்து செயற்பட வேண்டிய நிலையை உலகம் எதிர் கொண்டுள்ளது.