January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகில் அதிக மக்கள் தொகைக்கு 3வது தடுப்பூசி வழங்கிய நாடாக இஸ்ரேல் பதிவு!

இஸ்ரேல் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தமது நாட்டு பிரஜைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் கொவிட் -19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் வீரியமிக்க டெல்டா மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக இஸ்ரேல் தனது மக்கள் தொகையின் பரந்த பகுதிக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்கிய உலகின் முதல் நாடாக பதிவாகியுள்ளது.

கடந்த மாதம், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை வழங்கத் தொடங்கிய உலகின் முதல் நாடாகவும் இஸ்ரேல் உள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

“அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகள் எங்களிடம் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம். சென்று தடுப்பூசி போடுங்கள் ”என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் நிட்சான் ஹோரோவிட்ஸ் தெரிவித்தார்.

குறைந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னதாக இரண்டாவது தடுப்பூசி டோஸை பெற்றவர்கள் மட்டுமே 3 ஆவது டோஸூக்கு தகுதியானவர்கள் என அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, 1,575,898 இஸ்ரேலியர்கள் இதுவரை தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பெற்றுள்ளனர்.

டெல்டா மாறுபாடு காரணமாக சமீபத்திய வாரங்களில் இஸ்ரேலில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை உச்சத்தை எட்டியது.

திங்களன்று 9,800 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.மேலும் 678 பேர் இந்த நோயால் தீவிர நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 6,990 பேர் வைரஸால் இறந்துள்ளனர்.