January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானில் மற்றொரு தாக்குதல் நடக்கும் சாத்தியம் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி

காபூல் விமான நிலையத்தின் மீது மற்றொரு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா ஆப்கானிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில்,பிரித்தானியாவின் இறுதி விமானம் ஆப்கானிஸ்தான் மக்களை ஏற்றி கொண்டு வெளியேறியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தை குறிவைத்து இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சுமார் 170 பேர் இறந்தனர்.இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்)உரிமை கோரியிருந்தது.

இந்நிலையில்,இஸ்லாமிய அரசுக்கு பதிலடி வழங்கும் வகையில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை பிற்பகல் அமெரிக்கா ட்ரோன் தாக்குதலை நடத்தியது.இந்த தாக்குதலில் கோரசன் மாகாணத்தில் இஸ்லாமிய அரசின் இரண்டு “உயர்மட்ட” உறுப்பினர்கள் பலியாகினர்.

‘காபூல் தாக்குதலை மேற்கொண்ட குற்றவாளிகளுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு தலிபான் கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்கர்கள் முதலில் தங்களை கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துருப்புக்கள் விமான நிலையத்தில் இருந்து நாடு திரும்ப தொடங்கியுள்ளார்கள்.

மேலும்,தலிபான்கள் காபூல் விமான நிலையத்தைச் சுற்றி மேலும் பல சோதனைச் சாவடிகளை அமைத்து ஆப்கானிஸ்தானியர்கள் உள்நுழைவதை தடுத்து வருவதாக அசோசியேட்டட் பிரஸ் (AP) தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் 110,000 க்கும் அதிகமான ஆப்கான் மக்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, ஆப்கானிஸ்தானிலிருந்து இத்தாலியின் இறுதி விமானம் ரோம் வந்தது. இந்த விமானத்தின் மூலம் காபூலில் இருந்து ஏறக்குறைய 5,000 ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றியதாக இத்தாலி தெரிவித்துள்ளது.அதேபோல்,ஜெர்மனி சுமார் 4,000 ஆப்கானியர்களை அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளது.

தற்சமயம் விமானங்கள் மூலம் வெளியேறுவதற்கான சாத்தியங்கள் குறைந்து வருவதால், பல ஆப்கானியர்கள் பாகிஸ்தானின் நில எல்லை வழியாக கிழக்கு நோக்கி நாட்டை விட்டு தப்பிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

தெற்கு நகரமான ஸ்பின் போல்டாக் அருகே உள்ள எல்லைக் கதவுகள் திறந்திருப்பதால் மக்கள் வெளியேறிவருகிறார்கள். ஆனால், டோர்காமில் உள்ள முக்கிய எல்லை கதவுகளில் ஒன்று மூடப்பட்டுள்ளது.

காபூலை தலிபான்கள் ஆகஸ்ட் 15 ஆம் திகதி கைப்பற்றியதிலிருந்து, ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, உதவி வழங்கும் நாடுகள் தங்களுடைய உதவிகளை நிறுத்திவைத்துள்ளதுடன், நாட்டின் வைப்பாளர்கள் வங்கிகளில் இருந்து தங்களது பணத்தை எடுக்க முற்பட்டு வருகின்றனர்.