November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டனின் இறுதி பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது!

ஆப்கானிஸ்தானில் இருந்து பொது மக்களை வெளியேற்றும் கடைசி பிரிட்டன் விமானம் காபூலை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு வந்து இரண்டு வாரங்களில் ஏறக்குறைய 15,000 ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் பிரிட்டன் பிரஜைகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச இராணுவம் வெளியேறுவதற்கான காலக்கெடு 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் பிரிட்டனின் ஆயுதப் படைகளும் இப்போது வெளியேறத் தயாராகி வருகின்றன.

இந்த வார இறுதியில் மீதமுள்ள விமானங்களில் குறைந்த எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் பிரஜைகளை அழைத்துச் செல்ல எதிர்பார்ப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார்.

“ஆனால் இன்னும் வெளியேற வேண்டிய மக்களை நாங்கள் மறக்கவில்லை, அவர்களுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டனின் தூதர் லாரி பிரிஸ்டோ ஒரு அறிக்கையில் கூறினார்.

எனினும் பிரிட்டனுடன் பணிபுரிந்த மற்றும் நாட்டை விட்டு வெளியேறத் தகுதியான 800 முதல் 1,100 ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று வாலஸ் வெள்ளிக்கிழமை கூறினார்.

செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அப்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த தலிபான்களை வீழ்த்தியதில் அமெரிக்க படைகளுடன் பிரிட்டன் படைகள் இருந்தன.

இரண்டு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் பணியிலிருந்த 450 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் ஆயுதப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.