November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மைக் பொம்பியோவின் இந்திய விஜயத்தின் பின்னணி என்ன?

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இந்தியாவிற்கான விஜயத்தின் போது புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வது குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் தங்களுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், புலனாய்வுத் தகவல்களை பரிமாறுவது குறித்த இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வழமையான முப்படை ஒத்திகைகளுக்கு அப்பால், விண்வெளி மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்தும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளன.

அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கும் இந்திய தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது இருநாடுகளும் பிஈசிஏ என்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.

இது இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கக்கூடிய ஆளில்லா விமானங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா கொள்வனவு செய்வதற்கான முன்னோடி நடவடிக்கையாக அமையும் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தென்சீனா முதல் லடாக் வரையான பகுதிகளில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்த புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான புதிய உடன்படிக்கையொன்றிலும் இரு நாடுகளும் கைச்சாத்திடலாம்.

லடாக்கில் சீன இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்தும் தென்சீனப் பகுதியில் அது தனது பலத்தை வெளிப்படுத்த முயல்வது குறித்தும் இந்தியாவும் அமெரிக்காவும் ஆராயவுள்ளன.

சர்வதேச வர்த்தகத்திற்காக சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ -பசுபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளன.