பிரித்தானிய பிரதமரின் இலங்கைக்கான புதிய வர்த்தகத் தூதுவராக, தான் நியமிக்கப்பட்டமை பிரித்தானிய ஏற்றுமதிகள் மற்றும் முதலீடுகளை இலங்கையில் ஊக்குவிப்பதற்கான சிறந்த வாய்ப்பாகும் என்று லோர்ட் டேவீஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் இலங்கைக்கான புதிய வர்த்தகத் தூதுவராக நியமிக்கப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘இலங்கைக்கான வர்த்தகத் தூதுவராக நியமிக்கப்பட்டதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஐக்கிய இராஜ்ஜிய ஏற்றுமதிகள் மற்றும் முதலீடுகளை இலங்கையில் ஊக்குவிப்பதன் ஊடாக இரு நாடுகளுக்கும் நீண்ட கால நன்மைகளை ஏற்படுத்துவதே எனது எதிர்பார்ப்பாகும்.
பிரித்தானிய அரசாங்கத்தின் வர்த்தக இலக்குகளை சாத்தியப்படுத்திக்கொள்வதற்காக நான் இலங்கை அரச மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கின்றேன்’ என்று லோர்ட் டேவீஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் உட்கட்டமைப்பு, நிதிச் சேவைகள் உட்பட இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள முன்னணி துறைகளை மேம்படுத்துவதில் புதிய அனுபவங்களை ஏற்படுத்துவார் என்று இலங்கைக்கான உயர் ஸ்தானிகள் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.