July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானில் இருந்து படைகள் வெளியேறுவதைத் தாமதப்படுத்துமாறு பிரிட்டன் பிரதமர் ஆலோசனை

file photo: Facebook/ Boris Johnson

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதைத் தாமதப்படுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் பிரிட்டன் பிரதமர் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாளை அவசரமாகக் கூடவுள்ள ஜீ7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரிட்டனின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அமெரிக்க ஜனாதிபதியிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுக்க எதிர்பார்ப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க படைகளை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னரும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்க அனுமதிக்குமாறு பொரிஸ் ஜோன்சன் ஆலோசனை வழங்கவுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னரும் அமெரிக்க படைகள் ஆப்கானில் தங்கியிருப்பது பொதுமக்களை வெளியேற்றும் செயற்பாட்டுக்கு உதவியாக அமையும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க படைகள் இந்த மாதம் இறுதியில் ஆப்கானில் இருந்து வெளியேறவுள்ள நிலையில், காலத்தை நீடிப்பது குறித்து கலந்துரையாடுவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் ஆயிரத்துக்கும் அதிகமான பிரிட்டிஷ் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க படைகள் வெளியேறும் நிலையில், பிரிட்டிஷ் படையினரால் தாக்குப் பிடிக்க முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டிஷ் படை வெளியேறும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.