January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே சன நெரிசலில் சிக்கி ஏழு பேர் பலி!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடந்து அங்கிருந்து பெருமளவானோர் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்று வருகின்றனர்.

இதன்போது காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறுவதற்கான காலக்கொடு ஆகஸ்ட் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது.

இதற்கு முன்னதாக சர்வதேச அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களையும், தகுதியுள்ள ஆப்கானியர்களையும் நாட்டைவிட்டு வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

காபூலில் இருந்து பிரித்தானியர்கள் மற்றும் தகுதியான ஆப்கானியர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேம்பட்டு வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 1,700 க்கும் மேற்பட்டோர் விமானம் மூலம் வெளியேற்றப்பட்டதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளார்.

இதனிடையே ஆப்கானிஸ்தானியர்களை ஜெர்மனிக்கு கொண்டு சென்ற விமானத்தில் பயணித்த ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.

இதேவேளை காபூல் விமான நிலையத்திற்கு வெளியே தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதுடன், அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காணப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனால் தமது நாட்டு பிரஜைகளை அந்த விமான நிலையப் பகுதிக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்நிலையில் தாலிபான்கள் விமான நிலையத்திற்கு செல்லும் வீதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளதோடு, பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற முயலும் ஆப்கானியர்களைத் தடுத்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.