July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானில் தொடரும் பதற்றம்: வீடு வீடாகச் சென்று தேடுதல் நடத்தும் தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்கள், அங்கு தற்போது நேட்டோ மற்றும் முன்னாள் ஆப்கான் அரசாங்கத்திற்காக பணியாற்றியவர்களை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன என்று ஐநா அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாக சென்று தாலிபான்கள் இவ்வாறாக தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதன்போது தாம் தேடிச் செல்லும் நபர்களின் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தி வருவதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கான் தலைநகரான காபூலை முழுமையாக கைப்பற்றிய தாலிபான்கள், பின்னர் முழு நாட்டையுமம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்தனர்.

இதேவேளை தாம் பழிவாங்கும் செயலில் ஈடுபடமாட்டோம் எனவும், முன்னாள் அரசாங்கத்திற்காக செயற்பட்ட அனைவரையும் மன்னிப்பதாகவும், இதனால் அனைவரும் பணிகளுக்கு திரும்பலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் தாலிபன்கள் தங்களின் நிலையிலிருந்து மாறியிருக்க வாய்ப்பில்லை என்ற அச்சம் அங்கு தொடர்ந்தும் நிலவுகிறது.

இந்நிலையில் நோர்வேயை சேர்ந்த உலகளாவிய பகுப்பாய்வு மையம் வெளியிட்டுள்ள ரகசிய அறிக்கையொன்றை அடிப்படையாகக் கொண்டு, ஐநா அது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அச்சம் தொடர்வதால், அங்கு இருக்கும் தமது நாட்டு பிரஜைகளை வெளியேற்றும் முயற்சிகளில் வெளிநாடுகள் ஈடுபட்டுள்ளன.

இதற்கமைய காபூல் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஐந்து நாட்களில் 18,000 க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக நேட்டோ படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

அதேபோன்று வெளிநாட்டு ஆயுதப் படைகளுக்கு உதவிய மொழிப்பெயர்பாளர்கள் உள்ளிட்ட 6000 பேரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆப்கானிஸ்தான் மக்களிடையே நிலவும் அச்சம் காரணமாக நாட்டை விட்டுச் செல்வதற்காக பெருமளவானவர்கள் வருவதால் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே தொடர்ந்தும் அமைதியின்மை நிலவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.