July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்க வேண்டியதன் தேவை ஏற்படவில்லை’: உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டியதன் தேவை இதுவரையில் ஏற்படவில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதான விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகத்தில் தடுப்பூசி கிடைக்காதவர்களுக்கு தடுப்பூசி வழங்கி, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக நாடுகளில் முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி டோஸ்களின் வினைத்திறன்மிக்க தன்மை குறித்த தகவல்கள் இருந்தாலும், மூன்றாவது டோஸ் வழங்குவது குறித்த தகவல்கள் இல்லை என்று சௌம்யா சுவாமிநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசிகளைப் பகிர்ந்தளிப்பதில் பல்வேறு சிக்கல்களும் இருக்கும் நிலையில், மேற்கு நாடுகள் மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்குவதை அனுமதிக்க முடியாது என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.