Photo : UNICEF/UN0503455/Rouzier
கரீபியன் நாடான ஹெய்டியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஐ நெருங்கிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மையப்பகுதியான செயின்ட்-லூயிஸ் டு சுட் நகரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், கடந்த சனிக்கிழமை பதிவாகியது.
இந்த நிலநடுக்கமானது கரீபியனின் பெரும்பகுதி முழுவதும் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் குறைந்தது 1,941 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏறக்குறைய 10,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் சேதமடைந்த பகுதிகளில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பல தரைமட்டமாகியுள்ள நிலையில் அதற்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
இந்த வாரம் கரீபியன் பகுதியை தாக்கிய வெப்பமண்டல புயல் கிரேஸ் காரணமாக அங்கு பெய்துவரும் கனமழை மீட்புப் பணிகளை மேலும் தாமதமாக்கியுள்ளது.
எனினும் மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க போராடி வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டில் ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 200,000 க்கும் அதிகமான உயிர்களை கொன்றது. இதன் போது ஏற்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார பின்னடைவிலிருந்து நாடு இன்னும் மீண்டு வருகின்றது.
இந்த அனர்த்தம் காரணமாக ஹெய்டியில் சுமார் 500,000 குழந்தைகளுக்கு இப்போது தங்குமிடம், பாதுகாப்பான நீர் மற்றும் உணவு கிடைக்கவில்லை அல்லது இல்லை என ஐ.நா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஹெய்டி நாட்டின் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சனிக்கிழமை ஏற்பட்டுள்ள நில நடுக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றாக நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.