July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கான் நிலைமையை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது; வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் இந்திய அரசு கூறியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதை அடுத்து, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டு விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் அங்கு வான் எல்லை மூடப்பட்டதால் செல்ல முடியாமல் இடைநிறுத்தப்பட்டது.

இதனால் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்கள் குறித்து இந்திய எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றன.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஆப்கானிஸ்தான் செல்வதற்கு தயார் நிலையில் இருந்தபோது அங்கு விமான நிலைய சூழ்நிலை மோசமாக இருப்பதால் அங்கு செல்லும் நடவடிக்கை தவிர்க்கப்பட்டிருக்கிறது.

ஏராளமானோர் விமான நிலையங்களிலேயே காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் காபூலில் சிக்கியுள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய மக்களை மீட்க இந்திய விமானப்படைக்கு சொந்தமான குளோபமாஸ்டர் C17 ரக போர் விமானம் சென்றுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய பாஜக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

காபூல் நகரில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானத்தில் செல்ல மக்கள் கூட்டம் அலை மோதுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.