July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய மலேசிய பிரதமர் முஹ்யித்தீன் யாசின் பதவி விலகினார்!

(Photo : Facebook/Muhyiddin Yassin)

மலேசியாவின் பிரதமர் முஹ்யித்தீன் யாசின் ஆட்சிக்கு வந்து 17 மாதங்களே ஆகியுள்ள நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மலேசியாவில் அதிகரித்துள்ள கொவிட் -19 தொற்று நிலைமைக்கு மத்தியில் நடைபெற்று வந்த அரசியல் சண்டைகள் அந்நாட்டு மக்களின் கோபத்தை அதிகரித்தது.

இதனிடையே கூட்டணி கட்சிகளுடன் ஆட்சிக்கு வந்த முஹ்யித்தீன் யாசின் அந்த கட்சிகளுடன் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து தனக்கு பெரும்பான்மை இல்லை என கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டிருந்தார்.

தற்போது பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு முன்னதாக திங்கள்கிழமை காலை முஹ்யித்தீன் கடைசி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.

பிற்பகல் ஒரு தொலைக்காட்சி உரையில், பேசிய முஹ்யித்தீன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததால் பதவி விலக முடிவு செய்ததாகவும் விரைவில் ஒரு புதிய அரசு அமையும் என்று நம்புவதாகவும் கூறினார்.

“மீண்டும் ஒரு முறை நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்புக்கு நன்றி. கடவுள் மலேசியாவை ஆசீர்வதிக்கட்டும்.” எனவும் அவர் கூறினார்.

74 வயதான முஹ்யித்தீன் மலேசியாவின் 2020 மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் புதிய பெரிகடன் நேஷனல் (பிஎன்) கூட்டணியின் தலைவராக போட்டியிட்டு சிறிய பெரும்பான்மையுடன் பிரதமரானார்.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளில் ஒன்றான UMNO கட்சியின் சில உறுப்பினர் ஆதரவை மீளப்பெற்றுள்ள நிலையில், முஹ்யித்தீன் ஆட்சியில் தொடர்ந்தும் நீடிக்க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.

இதையடுத்து செப்டம்பரில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாக முஹ்யித்தீன் யாசின் கூறியிருந்தார்.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை, தனக்கு பெரும்பான்மை இல்லை என முஹ்யித்தீன் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் தற்போது பதவி விலகியுள்ளார்.

மலேசியாவில் இப்போதுவரை சுமார் 12,510 பேர் கொவிட் தொற்று நோயால் இறந்துள்ளனர்.
தொடர்ந்து நான்காவது நாளாகவும் 20,000 க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்களை ஞாயிற்றுக்கிழமை, மலேசியா பதிவு செய்துள்ளது.

நோயாளிகளின் அதிகரிப்பை சமாளிக்க முடியாது அரசு மருத்துவமனைகள் அதிக நெருக்கடியுடன் போராடி வருகின்றன.