ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில், பிரிட்டிஷ் மற்றும் நேட்டோ படைகள் தாலிபான்களுக்கு எதிராகப் போராடச் செல்வதில்லை என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக சர்வதேச ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பாதுகாப்பு அமைச்சர் பென் வோலஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் பிரஜைகள் மற்றும் பிரிட்டனுடன் தொடர்புடைய ஆப்கானியர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பென் வோலஸ் குறிப்பிட்டுள்ளார்.
தம்மிடமுள்ள விமானங்களின் கொள்திறனுக்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் 1200 முதல் 1500 வரையானோரை வெளியேற்ற எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தூதரகமும் காபூல் விமான நிலையத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளது.
தாலிபான்களை ஆப்கானிஸ்தானின் அரசாங்கமாக ஏற்றுக்கொள்வதற்கு இது சரியான தருணமல்ல என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.