விடுதலைப் புலிகளுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இருக்கவில்லை என்று தாலிபான் பேச்சாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமான டெய்லி மிரருக்கு தாலிபான் பேச்சாளர் கருத்து தெரிவிக்கும் போதே, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் சுதந்திரமான விடுதலை இயக்கம் என்றும் 20 வருடங்களாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பில் இருந்த நாட்டை மீட்கப் போராடியதாகவும் தாலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இருந்த போதோ அல்லது விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னரோ எவ்வித தொடர்பையும் தாலிபான்கள் பேணவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமைதியான ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த சின்னங்கள் தாக்கப்படும் என்ற கருத்தையும் தாலிபான் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, நாடு தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.