July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தலிபான்களின் பிடியில் ஆப்கானிஸ்தான்; ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்!

ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கும் தலிபான்களுக்கும் இடையில் உச்சக்கட்ட மோதல் நடந்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வரும் தாலிபான்கள்  ஞாயிற்றுக்கிழமை (15) அனைத்து பக்கங்களில் இருந்தும் காபூல் நகருக்குள் நுழைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனை ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சு உறுதி செய்தது. எனினும் காபூலில் தாம் தாக்குதல் நடத்த போவதில்லை என தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

காபூலை அமைதியான முறையில் ஒப்படைக்கும்படி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதிகார மாற்றம் ஏற்படும் வரை காபூல் நுழைவாயில்களில் காத்திருக்க போவதாகவும் தலிபான்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையிலேயே, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானின் ஆட்சி அதிகாரத்தை 1991ல் கைப்பற்றிய தலிபான், 2001ல் அமெரிக்க ராணுவத்தால் விரட்டி அடிக்கப்பட்டது.

அதன்பின், ஜனநாயக ஆட்சி நடந்து வந்த ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறுவதாக அறிவித்திருந்தன.

இந்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திய தலிபான்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான மேற்குலக படைகள் வெளியேறி வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக ஆப்கான் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தலிபான்கள் தீவிரப்படுத்தியிருந்தன.

இதில் ஆப்கானிஸ்தானின் 34 மாகாண தலைநகரங்களில் முக்கிய நகரங்கள் உட்பட 26 நகரங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதனை தொடர்ந்து அனைத்து பக்கங்களிலும் இருந்து முன்னேறிய தலிபான்கள் இன்று தலைநகரை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆப்கானிஸ்தான் இராணுவத்துடன் சண்டையிட்டு தொடர்ந்து முன்னேறிய தலிபான்கள் தற்போது நாட்டை கைப்பற்றியுள்ளமை சர்வதேசத்தின் கவலையை அதிகரித்துள்ளது.

தலிபான்கள் ஆட்சி ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்படுமானால் ஏனைய நாட்டவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, பல நாடுகள் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.

இதனிடையே அமெரிக்க துாதரக அதிகாரிகள் உள்ளிட்டோரை பத்திரமாக அழைத்துச் செல்ல அமெரிக்கா 3,000 ராணுவ வீரர்களை நேற்று ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.

தற்போதைய நிலைமை குறித்து “பல ஆண்டுகள் பாடுபட்டு ஆப்கன் பெண்களுக்கு மீட்டுத் தந்த சுதந்திரம் பறி போகும்” என ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.

முதன் முறையாக நேற்று தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி, ”ஆப்கனை வளர்ச்சி அடைய வைக்க 20 ஆண்டுகளாக மேற்கொண்ட சாதனைகளை சுலபத்தில் விட்டுத் தர முடியாது” என தெரிவித்திருந்தார்.

எனினும் அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தான் தேசிய நல்லிணக்க கவுன்சிலின் தலைவர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை இதனை காணொளி காட்சிகள் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார்.