January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹெய்டியில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!!

கரீபியன் நாடான ஹெய்டியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, 7.2 ரிக்டர் அளவிலான குறித்த நிலநடுக்கம், நாட்டின் மையப்பகுதியான செயின்ட்-லூயிஸ் டு சுட் நகரிலிருந்து சுமார் 12 கிமீ (7.5 மைல்) தொலைவில் பதிவாகியுள்ளது.

https://twitter.com/FabienneMondes3/status/1426562025380007942?s=20

 

இந்த நிலநடுக்கமானது கரீபியனின் பெரும்பகுதி முழுவதும் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்புகள் குறித்த சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை எனினும் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதை சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் காட்டுகின்றன.

 

2010 ஆம் ஆண்டில் ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 200,000 க்கும் அதிகமான உயிர்களை கொன்றது. இதன் போது ஏற்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார பின்னடைவிலிருந்து நாடு இன்னும் மீண்டு வருகின்றது.

கடந்த மாதம் ஹெய்டி நாட்டின் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சனிக்கிழமை ஏற்பட்டுள்ள நில நடுக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றாக நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.