ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தாலிபான்கள் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் ஆகிய மூன்று முக்கிய நகரங்களுக்குள் நுழைந்துள்ளதுடன் அங்குள்ள முக்கிய கட்டடங்களை கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அவர்கள் ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். இதில் இரான் மற்றும் பாகிஸ்தான் உடனான ஆப்கானிஸ்தானின் முக்கிய எல்லைப் பகுதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு முக்கிய நகரங்களை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கும் தாலிபான்கள் அங்கு ஆப்கான் படைகளை இலக்கு வைத்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக காந்தஹாரை தங்களின் தலைநகராக்கிக் கொள்ள தாலிபான்கள் திட்டமிட்டுள்ளதாகவும், இதன்படி காந்தஹார் அவர்கள் வசமானால், அப்பிராந்தியத்தில் இருக்கும் ஐந்து அல்லது ஆறு மாகாணங்களும் அவர்களின் வசமாகிவிடும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாலிபான்கள் நகாரத்தின் பல முனைகளில் இருக்கும் நிலையில், இந்த நகரத்தில் அதிக மக்கள் வாழ்வதால், தாலிபான்கள் முழுமையாக நுழைந்தால் கூட அரசுப் படைகளால் கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுவதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகளுக்கு ஆதரவாக இப்போதும் வான் வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதேவேளை தாலிபான்களின் தாக்குதலால் அங்குள்ள ஐநா அலுவலக வளாகத்துக்கு வெளியே காவலுக்கு இருந்த ஒரு வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தாலிபான்கள் வேண்டுமென்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஐ நா குற்றஞ்சாட்டியுள்ளது.
தாலிபான்கள் தொடர்ந்து தங்கள் தாக்குதல் மூலம் முன்னேறி வருவதால், வரும் மாதங்களில் பெரிய நெருக்கடி ஏற்படலாம் என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானில் நிலைகொண்டுள்ள சர்வதேச படைகளைப் பின்வாங்க, அரச படைகளுடன் ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த பெப்ரவரியில் இணக்கம் வெளியிட்டிருந்தார். இதன்படி 2021 செப்டம்பரில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து மீள அழைக்கப்படுவர் என்று உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் முக்கிய நகரங்களில் இருந்து ஏற்கனவே பெருமளவான சர்வதேசப் படைகள் அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தனர்.
இந்த நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ள தாலிபான்கள் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.