July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானில் பிரதான நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசுப் படைகளுடன் தாலிபான்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள தாலிபான்கள், அங்குள்ள கிராமிய பிரதேசங்களை இலக்கு வைத்து தீவிர தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி செய்திச் சேவை வெளியிட்டுள்ள தகவலின் படி, ஆப்கானிஸ்தானின் கன்தஹார், லக்‌ஷர்கா மற்றும் ஹெராட் உள்ளிட்ட பகுதிகளை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு தாலிபான்களின் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

இதனிடையே, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு இராணுவமும் பதில் தாக்குதலக்ளை நடத்தி வருவதால் ஒருசில பகுதிகளில் இருந்து தாலிபான்கள் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, தாலிபான்களினால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மிகவும் மோசமான முறையில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஆப்கானிஸ்தானின் மனித உரிமை பேவை அறிவித்துள்ளது.

அதுமாத்திரமின்றி, குறித்த பகுதிகளில் 100 பேருக்கு மரண தண்டணை வழங்கியதாகவும், அவர்களில் மத போதகர்கள், மூத்த தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகப்பாளர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அரசுடன் உடன்படிக்கை செய்துகொள்ள தயாராக இருப்பதாக தாலிபான்கள் அறிவித்திருந்தாலும், அதுவொரு யுக்தியொன்று மாத்திரம் என ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது

இதனிடையே, தாலிபான்களுடன் சுமுகமான பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகள் விரைவில் வெளியேற உள்ளன.

இதையடுத்து ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளை முறியடித்து அந்நாட்டில் பெரும்பாலான பகுதிகளை பழமைவாத தாலிபான்கள் கைப்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.