January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவில் பரவல் அடையும் “டெல்டா” மாறுபாடு; கட்டுப்பாடுகள் தீவிரம்!

உலகில் கொவிட் வைரஸின் முதல் தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட சீனா,  தனது தீவிர செயற்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதுடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் விரைவாக செயற்படுத்தி வருகின்றது.

இதனிடையே உலக நாடுகள் பலவற்றில் தீவிரமடைந்து வரும்  “டெல்டா” மாறுபாடு சீனாவில் நாஞ்சிங் நகரில் முதன்முதலில்  கண்டுபிடிக்கப்பட்டது.

இது தற்போது சீனாவில் பெய்ஜிங் உள்ளிட்ட ஐந்து மாகாணங்களுக்கு பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 20 அன்று நாஞ்சிங் நகரத்தின் பரபரப்பான விமான நிலையத்தில் வைரஸ் தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 200 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாஞ்சிங் நகரத்தில் தொற்றுக்குள்ளானவர்களில் ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகன் தெரிவித்துள்ளனர்.

வுஹானுக்குப் பிறகு சீனாவில் கண்டறியப்பட்ட மிக விரிவான தொற்று பரவல் இது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கொவிட் வைரஸ் தொற்று ஜூலை 10 அன்று ரஷ்யாவிலிருந்து வந்த விமானத்தில் வேலை செய்த துப்புரவு பணியாளர்களின் மூலம் பரவியுள்ளதாக நான்ஜிங்கில் உள்ள சுகாதார அதிகாரி டிங் ஜீ  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நான்ஜிங் விமான நிலையத்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் ஓகஸ்ட் 11 வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் வெடிப்புக்கு பின்னால் தீவிரமாக பரவும் “டெல்டா” மாறுபாடு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் தவறியதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில் நகரத்தின் 9.3 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு கொவிட் சோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் இது தொடர்பில் வெளியாகியுள்ள பதிவுகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் முகக்கவசங்களை அணியவும், ஒரு மீட்டர் இடைவெளியை பேணவும் காத்திருக்கும்போது பேசுவதைத் தவிர்க்கவும் வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சீனாவில் பரவல் அடைந்துவரும் புதிய கொவிட் மாறுபாடான “டெல்டா” வைரஸ் வகைக்கு எதிராக சீன தடுப்பூசிகள் செயல்படுகிறதா என்று கேள்விகளை எழுப்பியுள்ளன.

எனினும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களா என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்பட்டவில்லை.