photo:Twitter/Australian Army
அவுஸ்திரேலியா சிட்னி நகரில், அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்த அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் அனுமதி வழங்கியுள்ளார்.
ஐந்து வாரங்களாக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று சுமார் 170 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் முதல் ‘டெல்டா’ வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் புதிய வைரஸ் பரவலால் 3,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒன்பது மரணங்கள் பதிவாகியுள்ளன.
குறைந்தது ஆகஸ்ட் 28 வரை உடற்பயிற்சி உள்ளிட்ட அத்தியவசிய தேவைகளை தவிர்த்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிட்னி நகரில் மக்கள் அத்தியவசிய தேவைகளை தவிர்த்து ஏனைய நேரங்களில் வீடுகளில் தங்கியிருப்பதை உறுதிசெய்யும்வகையில் இராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்தற்காக சிறப்பு பயிற்சி வழங்கப்படும் சுமார் 300 இராணுவத்தினர் நிராயுதபாணியாக எதிர்வரும் ஒகஸ்ட் 2 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சிட்னிநகரில் கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளனர்.
இதனிடையே கொவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவது பாரதூரமானது எனவும் இது தொடர்பில் அரசு விளக்கமளிக்க வேண்டுமெனவும் அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
எனினும் ஏற்கனவே கொவிட் கட்டுப்பாட்டு பணிகளில் நாடுமுழுவதும் சுமார் 1300 இராணுவத்தினருக்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.