டெல்டா வைரஸ் வீரியத் தன்மையுடன் பரவக்கூடியதாக இருந்தாலும், ஏனைய வைரஸ்களைவிட உயிராபத்தை ஏற்படுத்துவது அல்ல என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் மாரியா வன் கேர்ஹோவே தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸில் இருந்து உருமாறிய சில வைரஸ்கள் மனித கலங்களுடன் விரைவாக ஒட்டிக்கொள்வதை அனுமதிப்பதால், பரவும் வீதம் அதிகமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெல்டா வைரஸ் தீவிர நோய் நிலைமையை ஏற்படுத்துவதையோ, உயிராபத்தை ஏற்படுத்துவதையோ தாம் அவதானிக்கவில்லை என்று மாரியா வன் கேர்ஹோவே தெரிவித்துள்ளார்.
தற்போது வைரஸ் தொடர்ந்தும் உருமாறி வருவதால், மாற்றங்கள் கடுமையானதாக இருக்கக்கூடும் என்று சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் மாரியா எச்சரித்துள்ளார்.
வைரஸ் தடுப்புக்கான சுகாதார முன்னெச்சரிக்கைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் முதற்கட்டமாக நோய்த் தொற்றுக்கு உள்ளாகுவதைத் தடுத்துக்கொள்வதே, வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான ஒரே வழி என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.