வட கொரியா மற்றும் தென் கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
ஒரு வருடத்திற்கு பின்னர் இரு நாடுகளின் தலைவர்களும் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் உறவுகளை மேம்படுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் அவர்கள் பல தனிப்பட்ட கடிதங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உயர்மட்ட தலைவர்களுக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஜூலை 27 அன்று 10 மணி முதல் அனைத்து கொரிய நாடுகளுக்கிடையேயான தொலைத் தொடர்பு இணைப்புகளை மீண்டும் இயக்க வட மற்றும் தென் கொரிய நாடுகள் நடவடிக்கை எடுத்தன” என்று வட கொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாத ஆரம்பத்தில் வட கொரியா மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையிலான ஹாட்லைன் வசதி, ராணுவத் தொடர்பு உட்பட தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவித்ததிருந்தது.
வட கொரிய மக்களுக்கு இணைய வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு தொலைக்காட்சிகள் மூலம் மட்டுமே அவர்களால் செய்திகளை அறிய முடியும்.
இந்த நிலையில், வட கொரியாவிலிருந்து தப்பி தென் கொரியா சென்ற குழுக்கள் தென் கொரிய எல்லையிலிருந்து, வட கொரிய அரசை விமர்சிக்கும் பிரசுரங்கள், பெரிய பலூன்களை வட கொரியா நோக்கி அடிக்கடி அனுப்பி வந்ததை வட கொரியா வன்மையாக கண்டித்தது.
அத்தோடு, தமது நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகள் தொடர்பில் தென் கொரியா கேள்வி எழுப்பவில்லை என்பதும் வட கொரியாவின் கோபத்தை அதிகரிக்கச் செய்திருந்தது.
எனினும் 2018 இல் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற உச்சி மாநாட்டில் வட கொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் தென் கொரியாவிலிருந்து அனுப்பப்படுவது தடுக்கப்படும் என தென் கொரியா உறுதியளித்தது.
இதையடுத்து வடகொரிய எல்லைக்குள் இருக்கும் தொடர்பாடல் மையம் மறுசீரமைக்கப்பட்டு தொடர்பாடல்களை முன்னெடுத்தது.
எனினும் 2020 ஜூன் முற்பகுதியில் மீண்டும் பிரசுரங்களை சுமந்த பலூன்கள் வட கொரிய எல்லையில் பறக்க விடப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு வெடித்தது.
இது கடந்த வருடம் ஜூன் மாத ஆரம்பத்தில் வட மற்றும் தென் கொரிய நாட்டு தலைவர்களுக்கு இடையிலான தொடர்பாடல் சேவை உட்பட அனைத்து இராணுவ மற்றும் அரசியல் தொடர்புகளையும் துண்டிக்க வழிவகுத்தது.
இந்நிலையில், மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்த தென் கொரியாவின் ஜனாதிபதி மூன் ஜே-இன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை அகற்றுவதை நோக்கமாக கொண்ட பேச்சுவார்த்தைகளையும் இரு நாடுகளும் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
,