May 25, 2025 23:50:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

231 தீவிரவாதிகளை அவசர அவசரமாக நாடுகடத்துகிறது பிரான்ஸ்

வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் 231 பேரை அடுத்த சில மணி நேரங்களில் நாடு கடத்துமாறு பொலீஸ் தலைமையகங்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் ஒழுங்கற்ற பதிவுகளோடு உள்ள தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதச் சந்தேகநபர்களே இவ்வாறு உடனடியாக தத்தமது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.

இந்த உத்தரவின் படி 231 தீவிரவாதிகளது பட்டியலில் தற்சமயம் சிறைகளில் உள்ள 180 பேர் உடனடியாக நாடு கடத்தப்படவுள்ள அதேவேளை,ஏற்கனவே சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 51பேர் அடுத்த சில நாட்களில் தேடிப்பிடிக்கப்பட்டு அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

தீவிரவாதிகளைத் திருப்பி அனுப்பும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தபோதிலும் தற்போது அதனை விரைந்து நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.