January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதாக துனீசிய மக்கள் போராட்டம்; பிரதமர் பதவி நீக்கம்!

துனீசியாவில் பொருளாதாரம் மற்றும் சமூக கொந்தளிப்பு காரணமாக நாட்டில் ஏற்கனவே அமைதியின்மை நிலவி வந்த நிலையில், பிரதமரை பதவி நீக்கம் செய்த அந்நாட்டு ஜனாதிபதி கைஸ் சையத் நாடாளுமன்றத்தையும் முடக்கியுள்ளார்.

கொவிட் தொற்றை அரசு சரியாக கையாளவில்லை என துனீசியா மக்கள் குற்றஞ்சாட்டிவந்தனர்.  முறையற்ற  தடுப்பூசி திட்டங்களுக்கு இடையே கடந்த வாரம் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரும் பதவி நீக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சிக்கு எதிராகவும் மற்றும் அவரது `என்ஹாடா` கட்சிக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டூஜூரில் உள்ள என்ஹாடா கட்சி தலைமையகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், கட்சி அலுவலகத்தை  சேதப்படுத்தியதுடன், தீயிட்டுக் கொளுத்தினர்.

லைநகரில் உள்ள துனீசில் நாடாளுமன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி சையத், பிரதமரை  பதவி நீக்கம் செய்ததுடன், நாடாளுமன்றத்தையும் 30 நாட்களுக்கு முடக்கியுள்ளார்.

இப்போது ஒரு புதிய பிரதமருடன் சேர்ந்து தான் ஆட்சி செய்ய உள்ளதாக துனீசிய ஜனாதிபதி சையத் கூறியுள்ளார்.

அவரது ஆதரவாளர்கள் இதைக் கொண்டாடினாலும் ஜனாதிபதி கைஸ் சையத் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘சமூக அமைதி துனீசியாவிற்கு திரும்பும் வரையிலும், இந்த அரசை காப்பாற்றும் வரையிலும் தனது முடிவு தொடரும்’ என ஜனாதிபதி கைஸ் சையத் கூறியுள்ளார்.

 

‘யாராவது துப்பாக்கியால் சுட்டால், அவர்களுக்கு இராணுவம் துப்பாக்கியால் பதில் சொல்லும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2019 ல் சுயேச்சையாக போட்டியிட்ட கைஸ் சையத் துனீசியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாட்டில் ஆபத்து இருந்தால் அரசியலமைப்பின் 80 வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தை முடக்க தனக்கு அதிகாரம் உள்ளதாக ஜனாதிபதி சையத் தெரிவித்துள்ளார்.

எனினும் துனீசியாவின் அரசியலமைப்பின்படி, ஜனாதிபதிக்கு இராணுவ மற்றும் வெளிநாட்டு விவகாரங்களில் மட்டுமே அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.