July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் 19 வைரஸ் தோற்றம் தொடர்பான இரண்டாம் கட்ட ஆய்வுக்கு சீனா மறுப்பு!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவிட் 19 வைரஸ் தோற்றம் தொடர்பான இரண்டாம் கட்ட திட்டத்தை சீன அரசு நிராகரித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சீனாவில் முதன் முதலில் இனங்காணப்பட்ட கொவிட் வைரஸ் தோற்றம் தொடர்பில் சீன ஆய்வகங்களின் தணிக்கை உட்பட மேலும் ஒத்துழைப்புகளை வழங்கும்படி, சீனாவுக்கு அழைப்பு விடுத்தார்.

அத்தோடு இரண்டாம் கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை அவர் முன்வைத்திருந்தார்.

இதில் “வெளிப்படையாக இருக்க வேண்டும், மற்றும் புலனாய்வாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல் விசாரணையின் போது பகிரப்படாத முதலாவது கொவிட் தொற்றாளரின் தரவை வழங்க வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முன்மொழியப்பட்ட விதிமுறைகளை சீனா நிராகரித்துள்ளது.

வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதி சுகாதார அமைச்சர் ஜெங் யிக்சின், உலக சுகாதார அமைப்பின் திட்டத்தால் மிகவும் ஆச்சரியப்படுவதாக கூறியுள்ளார்.

ஏனெனில் இந்த விதிமுறைகள் சீனாவின் ஆய்வக நெறிமுறைகளை மீறுவதாகவும் இது “பொது அறிவுக்கு அவமரியாதை மற்றும் அறிவியலுக்கான ஆணவம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டம் அரசியல் மயமாக்கப்பட்டதாகவும், அதை சீனா ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரியில் உலக சுகாதார ஸ்தாபனம் கொவிட் வைரஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வுஹானுக்கு நிபுணர் குழுவை அனுப்பியது.

எனினும் நிபுணர் குழுவிற்கு, ஆய்வுகளை மேற்கொள்ள வுஹானுக்கு மட்டுமே சீனா அனுமதி வழங்கியது.

இந்த ஆய்வின் இறுதியில் கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்திலிருந்து தப்பிப்பது மிகவும் சாத்தியமில்லை என்று ஆய்வாளர்கள் முடிவு செய்திருந்தனர்.

எனினும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்தும் இந்த விடயத்தில் விடாப்பிடியாக இருந்து வருகின்றன.