July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக தலைவர்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் தொலைபேசிகளை உளவு பார்த்ததாக ‘பெகாசஸ்’ மீது குற்றச்சாட்டு!

உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் செய்தியாளர்கள் உள்ளிட்ட 50,000 தொலைபேசிகள் இஸ்ரேலின் “பெகாசஸ் ஸ்பைவேர்” மென்பொருள் ஊடாக ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளன.

பிரபல செய்தி நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆா்வலர்கள், அரசியல் வாதிகள் உள்ளிட்டவர்களின் தொலைபேசிகளும் இவ்வாறு “பெகாசஸ்” மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த வரிசையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் ஒருவர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மக்ரோன் 2017 முதல் பயன்படுத்தி வந்த தொலைபேசியை மொராக்கோ உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளதாக பிரான்ஸ் செய்தித்தாள் “லு மொன்டே” தெரிவித்துள்ளது.

இதையடுத்து “பெகாசஸ்” மென்பொருளை பயன்படுத்தி தனிநபர் இரகசிய தகவல்களின் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளதா, தகவல்கள் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டனவா, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டனவா என விசாரணைகள் இடம்பெறும் என பிரான்ஸின் நீதி அமுலாக்கத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

“பெகாசஸ்” மென்பொருள் தொலைபேசிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அதனை செயற்படுத்துபவர்களுக்கு தங்களை இலக்கு வைக்கும் நபர்களை உளவு பார்க்க அனுமதிக்கிறது.

இஸ்ரேலிய நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ குழுமத்தினால் இயக்கப்படும் இந்த மென்பொருள் ஊடாக சுமார் 50,000 தொலைபேசி எண்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பட்டியலில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள குறித்த நிறுவனம், இந்த மென்பொருள் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

அத்தோடு,இந்த மென்பொருள் அங்கீகரிக்கப்பட்ட புலனாய்வு அமைப்புகளுக்கும் மனித உரிமை மீறல்கள் அற்ற இராணுவத்தினருக்கும் மட்டுமே வழங்கப்படுவதாகவும் இஸ்ரேலினை தளமாக கொண்ட நிறுவனம் தெரிவிக்கின்றது.

கசிந்துள்ள பட்டியலில் உள்ள தொலைபேசி எண்களில் ஈராக்கின் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் மற்றும் தென்னாபிரிக்காவின் சிரில் ரமபோசா, அதேபோல் பாகிஸ்தான், எகிப்து மற்றும் மொராக்கோவின் தற்போதைய பிரதமர்கள் மற்றும் மொராக்கோ மன்னர் ஆகியோரும் உள்ளனர்.

34 நாடுகளைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த பட்டியலில் உள்ளனர்.

எனினும் இந்த பட்டியலில் உள்ளவர்கள் அனைவரினதும் தொலைபேசிகள் உளவு பார்கப்பட்டுள்ளதா என்பதும் பிரான்ஸ் ஜனாதிபதி தொலைபேசியில் “பெகாசஸ்” மென்பொருள் நிறுவப்பட்டமையும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இந்த பட்டியலில் உள்ளவர்களில் எத்தனை பேர் உண்மையில் குறிவைக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.ஆனால் என்.எஸ்.ஓ குழுமத்தின் மீதான உலகளாவிய அழுத்தத்தை இந்த செய்திகள் அதிகரித்துள்ளன.

இந்தியாவிலும் 40 பத்திரிகையாளர்கள், 2 மத்திய அமைச்சர்கள் உட்பட 300 பேரின் ஸ்மார்ட்போன்களின் எண்களும் பட்டியலில் உள்ளதாக இந்திய இணையத்தள செய்தி நிறுவனமான `தி வயர்’ தெரிவித்துள்ளது.

முன்னதாக 2016 ஆம்ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் போராட்டக் குழு ஒன்றுக்கு தேவையான தகவல்களை “பெகாசஸ் ஸ்பைவேர்” உளவு மென்பொருள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.