January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முதல் விண்வெளி சுற்றுலா வெற்றிகரமாக நிறைவேறியது!

“ப்ளூ ஆர்ஜின்” நிறுவனத்தின் விண்வெளி சுற்றுலா பயணம் இன்று (20) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

“அமேசான்” நிறுவனரும் உலக பணக்காரருமான ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) விண்வெளி பயணத்தை சுற்றுலா பயணமாக மாற்றும் முயற்சியில் நீண்டகால திட்டத்தை செயற்படுத்தி வந்தார்.

இதற்கமைவாக இன்று முதலாவது விண்வெளி சுற்றுலா பயணத்தை ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க் பெசோஸ், அமெரிக்க நாட்டை சேர்ந்த 82 வயதுடைய, ஓய்வு பெற்ற மூத்த பெண் விமானி வாலி பங்க் (Wally Funk), 18 வயது ஆலிவர் டையமென் (Oliver Daemen) ஆகியோருடன் மேற்கொண்டுள்ளார்.

“ப்ளூ ஆர்ஜின்” நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட “நியூ ஷெப்பெர்ட்” (New Sheperd) எனும் மிகப்பெரிய ஜன்னல்களுடன் அமைந்த விண்கலத்தில், டெக்சாஸின் வான் ஹார்னுக்கு அருகிலுள்ள ஒரு தனியார் ஏவு தளத்திலிருந்து 14:12 பிஎஸ்டி மணிக்கு பயணத்தை ஆரம்பித்தனர்.

பயணம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நிமிடங்களில், காப்ஸ்யூல் அதன் ரொக்கெட்டிலிருந்து பிரிக்கப்பட்டு கர்மன் கோட்டை நோக்கி மேல் நோக்கி பறந்தது.

ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கலத்தில் விண்வெளியின் மிகவும் பரவலான எல்லையாக அங்கீகரிக்கப்பட்ட 100 கி.மீ. உயரத்தில் அவர்கள் பறந்தனர்.

இதன் போது பயணிகள் சுமார் நான்கு நிமிடங்கள் எடையற்ற தன்மையை அனுபவித்தனர்.

மேலும் தங்கள் இருக்கைகளில் இருந்து விலகி மிதக்க முடிந்ததாகவும் புவியின் காட்சிகளை பார்க்க முடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

வெற்றிகரமான விண்வெளி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட 4 பேரும் 11 நிமிடங்களின் பின்னர் மேற்கு டெக்சாஸ் பாலைவனத்தில்  பரசூட்டில் தரையை அடைந்தனர்.

இந்த பயணத்தில் விண்வெளிக்கு சென்ற மிக வயதான நபராக 82 வயதான வாலி பங்கும் மிக இளைய நபராக 18 வயது ஆலிவர் டையமெனும் இடம் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த விண்வெளி  பயணத்தை சாத்தியப்படுத்திய ப்ளூ ஆர்ஜின் குழுவில் இந்திய பெண் சஞ்சல் காவன்தே முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ப்ளூ ஆர்ஜினின் “நியூ ஷெப்பர்ட்” ரொக்கெட்டை வடிவமைத்ததில் சஞ்சல் காவன்தே முக்கிய பணிகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதற்கு முன்னதாக உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரான்ஸன் தனது சகாக்களுடன் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதையடுத்து பணம் கொடுத்து விண்வெளிக்கு சென்ற முதல் நபராக ரிச்சர்ட் பிரான்ஸன் வரலாற்றில் இடம்பிடித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் இந்த பயணத்தை முன்னெடுத்திருந்தனர். இவர்கள் பயணித்த யூனிட்டி ரொக்கெட் விமானம், புவியிலிருந்து 86 கிமீ உயரம் வரை பறந்தது.

அங்கு விண்கலத்தில் பயணித்த குழுவினர் 4 நிமிட புவியீர்ப்பு விசை இல்லாத நிலையை அனுபவித்ததாக தெரிவித்திருந்தனர்.