(Photo : twitter /Germany in the EU)
ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தின் பல பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கு வடிந்து வரும் நிலையில், மக்கள் தமது சுற்றுப் புறங்களை சுத்தம் செய்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மிகப்பெரிய பணியைத் தெடங்கியுள்ளனர்.
குறைந்தது 180 பேரின் உயிரை பறித்த இந்த வெள்ளப் பெருக்கில் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஜெர்மனி ஜனாதிபதி அங்கேலா மேர்க்கெல் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன் போது, வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட ஷூல்ட் கிராமத்தின் வழியாக நடந்து சென்ற ஜனாதிபதி, சேதங்களை பார்வையிட்டதோடு, குடியிருப்பாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களுடன் உரையாடினார்.
இதனிடையே ஜெர்மனியின், தெற்கே அப்பர் பவேரியா பகுதியும் பலத்த மழை காரணமாக சவால்களை எதிர்கொண்டுள்ளது.
மேற்கு ஜெர்மனியில்,ஸ்டீன்பாக்டல் அணையை மீறி வெள்ளம் பாயும் அபாயத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சனிக்கிழமையன்று ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெள்ளம் தொடர்ந்தும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரிய பிராந்தியமான சால்ஸ்பர்க்கில் வெள்ள நீர் ஒரு நகரத்தை மூழ்கடித்தது.இதையடுத்து வீடுகளில் சிக்கி தவித்த மக்களை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்,
முந்தைய ஏழு வாரங்களை விட சனிக்கிழமை இரவு ஒரு மணி நேரத்தில் தலைநகர் வியன்னாவில் அதிக மழை பெய்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
புவி வெப்பமடைதல் காரணமாக மழை வீழ்ச்சி அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தொழில்துறை புரட்சி தொடங்கியதிலிருந்து உலகம் சுமார் 1.2 செல்சியஸ் வரை வெப்பமடைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.