January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 150 க்கு அதிகமானோர் பலி; மீட்புப் பணிகளிலும் சிக்கல்

மேற்கு ஐரோப்பா முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 150 க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளப் பெருக்கு நிலைமை காரணமாக உயிருடன் உள்ளவர்களை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் உதவி கோரி கைகளை அசைக்கின்ற நிலையிலும், அவர்களை மீட்க முடியாதளவு வெள்ள நிலை தொடர்வதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் நூற்றுக் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.

சுவிட்சர்லாந்து, லக்ஸம்பேர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நெதர்லாந்தில் அவசர நிலைமையைப் பிரகடனப்படுத்த பிரதமர் மார்க் ரூட் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பருவ கால மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் என்பன இவ்வாறான மழை வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ள அனர்த்தம் காரணமாக போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின் வழங்கல் ஆகியனவும் பாதிக்கப்பட்டுள்ளன.