
நியூசிலாந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட வனுசி வோல்டர்ஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து அனைவரதும் கவனம் அவரை நோக்கி திருப்பியுள்ளது.
இலங்கையில் புகழ்பெற்ற சரவணமுத்து குடும்பத்தைச் சேர்ந்த வனுசியின் குடும்பம் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்டது.
வனுசியின் தந்தை வழி உறவினரான லூசியா சரவணமுத்து இலங்கையின் அரசபேரவையின் உறுப்பினராக கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து 1931ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டவர்.
லூசியா சரவணமுத்துவின் கணவரான சேர் ரட்ணசோதி சரவணமுத்து கொழும்பு மாநகரசபையில் முதலாவது தெரிவு செய்யப்பட்ட முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
வனுசி தனது ஐந்து வயதிலேயே நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தவர்.
இலங்கையில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அரசாங்கத்தின் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ரிச்சட் டி சொய்சாவின் நெருங்கிய உறவினரான வனுசி, மனித உரிமை விடயங்களில் தனக்கு ஆர்வம் ஏற்படுவதற்கு இந்த சம்பவமும் ஒரு காரணம் என பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
“ஆட்சிமுறை தொடர்பான எனது பயணம் எனது பதின்மவயதிலேயே ஆரம்பமாகிவிட்டது. எனது நெருங்கிய உறவினரான- எனது அப்பாவின் குடும்பத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், 1990 இல் அப்போதைய இலங்கை அரசாங்கம் குறித்து கருத்து வெளியிட்டமைக்காக சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை அறிந்தேன். இது என்னை சர்வதேச மன்னிப்புச்சபையின் தொண்டராக பணியாற்றுவதற்கு இட்டுச்சென்றது என தெரிவித்துள்ள அவர், இதன் பின்னர் நான் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்கள், ஆட்சி தீர்மானம் எடுத்தல் போன்ற விடயங்கள் குறித்து எனது ஆர்வத்தை செலுத்த தொடங்கினேன் என அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கொவிட் 19 க்கு மத்தியிலும் தன்னுடைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்திருந்த வனுசி,
இலங்கை அரசாங்கத்துடனும் உலகம் முழுவதிலும் பரந்து வாழும் தமிழ்ச் சமூகத்துடனும் உறவுகளை பலப்படுத்திக்கொள்வதற்கு தான் விரும்புவதாக தன்னுடைய தேர்தல் பரப்புரைகளின் போது தெரிவித்திருந்தார்.
14,142 வாக்குகளை இவர் பெற்று தனது வெற்றியைத் தக்கவைத்துக்கொண்ட வனுஷி இராஜநாயகம், நியூசிலாந்து அரசாங்கத்திலும் சர்வதேச ரீதியாகவும் பல்வேறு பொறுப்புவாய்ந்த உயர் பதவிகளை வகித்ததன் மூலம் பரந்த நிபுணத்துவ அறிவையும் அனுபவத்தையும் கொண்டவர்
சட்டத்துறையிலும் இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் பலவற்றிலும் முக்கியமான பதவிகளையும் வகித்திருக்கும் இவர், தற்போது நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு சிரேஷ்ட முகாமையாளராகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.