January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவுக்கு சீனா விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்க நீதி திணைக்களம் சீன இராணுவத்துடன் தொடர்புடைய கல்விமான்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு பதிலடியாக சீனாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதாக
வோல்ஸ் ஸ்ரீட் ஜேர்னல் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ள்ளது.

பல வட்டாரங்கள் ஊடாக அமெரிக்க அதிகாரிகளிடம் சீன அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை தெரியப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ள வோல்ஸ் ஸ்ரீட் ஜேர்னல், சீன கல்விமான்களை அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரணை செய்வதை அமெரிக்கா நிறுத்தவேண்டும் அல்லது சீனாவில் உள்ள அமெரிக்கர்கள் சீன சட்டங்களை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளக்கூடும் என்பதே சீனாவின் எச்சரிக்கை என தெரிவித்துள்ளது.

சீனா உலகநாடுகள் மீது செல்வாக்கு செலுத்துவதற்காக கண்மூடித்தனமான தடுத்துவைத்தல் மற்றும் தனது நாட்டிலிருந்து வெளியேற தடை போன்றவற்றை பயன்படுத்தலாம் என கடந்த மாதம் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது பயணவழிகாட்டலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க கல்விநிலையங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான விசாவுக்காக விண்ணப்பித்தவேளை சீன இராணுவத்துடன் தமக்கிருந்த தொடர்புகளை மறைத்தனர் என்ற குற்றச்சாட்டில் ஜூலை மாதம் எவ்.பி.ஐ மூன்று சீன பிரஜைகளை கைதுசெய்திருந்தது.

கடந்த மாதம் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன பிரஜைகளுக்கான விசாவை அமெரிக்கா இரத்து செய்திருந்த அதேவேளை, சீனா இதனை கடுமையாக சாடியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.