July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானில் மொழிபெயர்ப்பு பணிகளில் உதவியவர்களை மீட்கத் தயாராகிறது அமெரிக்கா

அமெரிக்க படைகளுக்கு ஆப்கானிஸ்தானில் மொழிபெயர்ப்பு பணிகளில் உதவியவர்களையும் அந்நாட்டில் இருந்து மீட்பதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தீர்மானித்ததில் இருந்து, அங்கு தாலிபான்களின் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

அமெரிக்க படைகள் ஆப்கான் முகாம்களில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, படைகளுக்கு மொழிபெயர்ப்பு உதவியை வழங்கியவர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

அமெரிக்க படைகளுக்கு ஆப்கானிஸ்தானில் உதவிய மொழிபெயர்ப்பாளர்களை மீட்டு, இம்மாத இறுதியில் இருந்து அமெரிக்காவில் புகலிடம் வழங்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகளைத் திரும்பப் பெறுவதற்கான இறுதித் தினமாக செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி குறிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க படைகள் அதற்கு முன்னரே வெளியேற ஆரம்பித்துள்ளன.

அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தோடு, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளிலும் தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கு உதவிய 2500 க்கு மேற்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் அல்லது மூன்றாம் நாடொன்றில் புகலிடம் பெறுவதற்கான ஏற்பாடுகளை வெள்ளை மாளிகை செய்து வருகிறது.