May 24, 2025 16:22:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற வன்முறைகளில் இதுவரை 45 பேர் பலி!

(Photo : twitter /South African Government)

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜெகொப் ஸூமா சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டின் சில பகுதிகளில் வெடித்த வன்முறையில் இதுவரை குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி ஜெகொப் ஸூமா நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை தொடங்கி வார இறுதி வரையில் வன்முறைகள் காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவில் உள்ள மால் ஒன்று திங்கட்கிழமை இரவு கொள்ளையடிக்கப்பட்ட போது ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு, நாட்டில் வன்முறைகளை கட்டுப்படுத்தும் பணியில் பொலிஸாருடன் இராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளது.

 

1990 ஆம் ஆண்டுகளின் பின் தென்னாபிரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான வன்முறை என்று ஜனாதிபதி சிரில் ரமபோசா தற்போதைய சூழ்நிலையை விபரித்துள்ளார்.

ஜெகொப் ஸூமா, 2009 முதல் 2018 வரை தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்தார். இந்தக் காலப்பகுதியில் ஊழல் செய்ததாக இவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.

அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அவர் ஆஜராகாததன் காரணமாக நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார்.