ஈராக் நகரமான நசீரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக்கின் தெற்கு மாகாணம் தி குவாரில், நசீரியா நகரில் அல்-ஹுசைன் என்ற போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை மாலை குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.ஆனால் ஒக்ஸிஜன் தொட்டி வெடித்த பின் தீ பரவல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட 70 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா வார்டில் இந்த வெளிடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
https://twitter.com/thestevennabil/status/1414723224336691204?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1414723224336691204%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.aljazeera.com%2Fnews%2F2021%2F7%2F12%2Fat-least-20-killed-in-iraq-covid-19-ward-fire-health-official
இதையடுத்து வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த 64 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 52 சடலங்கள் இன்று (செவ்வாயன்று) மீட்கப்பட்டதாகவும், 70 பேர் வரை காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையின் முன்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு பொலிஸ் வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஈராக்கிய பிரதமர் முஸ்தபா அல் காதிமி மருத்துவமனையின் தலைவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
பல வருட மோதல்களுக்கு பின்னர் ஈராக்கின் சுகாதார பாதுகாப்பு முறைமை மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியை சமாளிப்பதில் நாடு பெரும் சவாலான நிலைக்கு தள்ளப்பட்டது.
சம்பவத்தை தொடர்ந்து ஈராக் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது அல்-ஹல்பூசி, “ஈராக் உயிர்களை பாதுகாக்க தவறியதற்கு தெளிவான சான்று” இது என்றும், இந்த பேரழிவு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது என்றும் ட்வீட் செய்துள்ளார்.