July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எகிப்தில் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களை பாதுகாக்க கடுமையான தண்டனைகள் அமுல்

எகிப்திய பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை செயற்படுத்தவும் மோசமான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கவும் அந்நாட்டு பாராளுமன்றம் திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பெரும்பாலான எகிப்தியர்கள் கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக குரல் எழுப்பிய நிலையில் அந்நாட்டு அரசு தண்டனைகளை கடுமையாக்கியுள்ளது.

இது நீண்டகாலமாக பெண்களின் உரிமைகள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிரான செயற்பாடுகளில் பின்தங்கியதாக இருந்த எகிப்தில், பாலியல் தொடர்பான தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் இந்த சட்டங்கள் அமுல் படுத்தப்பட்டுள்ளன.

பழமைவாத, முஸ்லீம் பெரும்பான்மை நாட்டில் சமீபத்திய ஆண்டுகளாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பல உயர் நீதிமன்ற வழக்குகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்க புதிய சட்டங்கள் வழிவகுக்கின்றன.

புதிய சட்டங்களின் படி, பாலியல் துன்புறுத்தலுக்கான சிறை தண்டனை குறைந்தபட்சம் ஒரு வருடம்  முதல் ஐந்து வருடங்கள் வரையும் அல்லது 19,100 முதல் 20,000 எகிப்திய பவுண்டுகள் வரையும் உயர்த்தப்பட்டுள்ளன.

தொழில் ரீதியான அல்லது குடும்ப உறவின் காரணமாகவோ, அதிகார ஏற்றத்தாழ்வு நிலவிய சூழ்நிலைகளில், சிறை தண்டனை  குறைந்தபட்சம்  இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அதிகபட்ச அபராதமாக 500,000 எகிப்திய பவுண்டுகள் விதிக்கப்பட புதிய சட்டம் பரிந்துரைக்கின்றது.

அதேபோன்று பின் தொடர்தல் மற்றும் பொது இடங்களில் துன்புறுத்தலுக்கான அபராதங்களும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.