July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த ஆண்டில் முதலாவது கொரோனா உயிரிழப்பை பதிவு செய்தது அவுஸ்திரேலியா!

உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளின் இடையே அவுஸ்திரேலியா கொரோனா தொற்று பரவலை நீண்ட காலமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகின்றது.

இந்நிலையில், தற்போது அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த ஆண்டின் முதலாவது கொரோனா மரணம் ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

90 வயதான பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஓரிரு வாரங்களாக அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகளுடன் முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு மூன்று வாரங்களாக முடக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். புதிய தொற்று எண்ணிக்கையை தொடர்ந்து முடக்கல் நீடிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

அத்தோடு அங்கு “டெல்டா” வைரஸ் தொற்றுக்கு உள்ளான 77 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்.

சிட்னியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 52 தொற்றாளர்களில் பதினைந்து பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் ஐந்து பேருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதாவும், இவர்களில் 11 பேர் 35 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமையன்று பதிவான 50 தொற்றாளர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டில் பதிவான அதிகூடிய தினசரி எண்ணிக்கை என அந்நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டில் பதிவான தொற்று எண்ணிக்கை 566 ஆக பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 31,000 க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 911 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே அங்கு தடுப்பூசி திட்டம் மந்தமாக நடைபெற்று வருகின்றது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஆபத்தான குழுவில் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தடுப்பூசியின் ஒரு டோஸை கூட ஏற்றிக் கொள்ளாதவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.