
(Photo : twitter /Syed Rizwan Qadri)
பங்களாதேஷில் உணவு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் கொல்லப்பட்டதுடன், 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டாக்காவுக்கு அருகில் தொழில்துறை நகரமான ரூப்கஞ்சி பகுதியில் உள்ள ஹஷேம் உணவு மற்றும் பானம் தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை இரவு குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஆறு மாடி தொழிற்சாலையில் பழச்சாறுகள், நூடுல்ஸ் மற்றும் இனிப்பு பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.
தொழிலாளர்கள் வெளியில் செல்ல முடியாதவாறு ஒவ்வொரு மாடிப்பகுதியும் பூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக உள்ளே சிக்கிய தொழிலாளர்கள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் யன்னல்கள் வழியாக குதித்த போது பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கட்டடத்தின் உள்ளே இரசாயனங்கள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஆந்திர செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
விபத்தின் போது தொழிற்சாலையிலிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த பதிவுகள் இல்லாததன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.