November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூஸிலாந்தில் ஜசிந்தா ஆர்டெர்னின் தொழிற்கட்சி வரலாறு காணாத வெற்றி

நியூஸிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பெரு வெற்றி பெற்றுள்ளார்.

ஜசிந்தா ஆர்டெர்னின் தொழிற்கட்சி 49.1 வீதமான வாக்குகளை வென்று நாடாளுமன்றத்தின் 120 ஆசனங்களில் 64 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

மத்திய வலதுசாரி தேசிய கட்சியால் 26.8 வீத வாக்குகளுடன் 35 ஆசனங்களையே வெல்லமுடிந்துள்ளது.

1996 ஆம் ஆண்டில் நியூசிலாந்து கலப்பு-உறுப்பினர் விகிதாசார வாக்களிப்பு முறையை ஏற்றுக்கொண்டதிலிருந்து கட்சியொன்று 60க்கும் மேற்பட்ட ஆசனங்களை கைப்பற்றியது இதுவே  முதல்தடவை.

கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ஜசிந்தா ஆர்டெர்ன் எடுத்த முயற்சிக்காக மக்கள் அவருக்கு இந்த ஆதரவை வழங்கியுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

வெற்றிக்குப் பின்னர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஆனந்தக் கண்ணீருடன் பேசிய ஜசிந்தா, முதல் அரைமணி நேரம் நியுசிலாந்தின் பூர்வீக குடிகளின் மௌரி மொழியில் உரையாற்றினார்.

கடந்த ஐம்பது வருடங்களில் தொழிற்கட்சிக்கு நியுசிலாந்து மக்கள் வழங்கிய பெரும் வெற்றி இது என அவர் தெரிவித்தார்.

“நாங்கள் அதிகளவு துருவமயப்படுத்தப்பட்ட- பிளவுபடுத்தப்பட்ட – உலகில் வாழ்கின்றோம். ஆனால் இந்தத் தேர்தல் மூலம் நியுசிலாந்து மக்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்” என ஜசிந்தா ஆர்டெர்ன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

தொழிற்கட்சி 50 வீதத்துக்கும் அதிகமான ஆசனங்கனை வென்றுள்ளமையால் ஆர்டெர்னால் கூட்டணியின்றி தனித்து அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.