July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாலிபான்களின் தொடர் தாக்குதலால் ஆப்கான் படையினர் தஜிகிஸ்தானுக்கு தப்பியோட்டம்

தாலிபான் ஆயுததாரிகளுடனான போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் படையினர் அயல் நாடான தஜிகிஸ்தானுக்குள் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது.

ஆப்கானிஸ்தான் படையினர் தமது உயர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தமது எல்லைக்குள் பின்வாங்கியதாக தஜிகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் வன்முறைகள் அதிகரித்துள்ளதோடு, தாலிபான் ஆயுததாரிகள் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க, பிரிட்டன் மற்றும் நட்பு நாடுகளின் படையினர் விலகிக்கொள்வதாக அறிவித்ததில் இருந்து யுத்த நிலை தீவிரமடைந்துள்ளது.

செப்டம்பர் மாதம் அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அரச படையினரே நாட்டின் பாதுகாப்பைப் பொறுப்பேற்கவுள்ளனர்.

இந்நிலையில், தாலிபான்களின் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் ஆப்கான் படையினர் கடந்த மூன்று நாட்களில் மூன்று தடவைகள் தஜிகிஸ்தானுக்குள் தப்பியோடியுள்ளனர்.

1600 ஆப்கான் படையினர் தஜிகிஸ்தான் எல்லையைக் கடந்துள்ளதாக தஜிகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.