அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மரண தண்டனைகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்க சட்டமா அதிபர் உத்தரவிட்டள்ளார்.
17 வருட இடைவெளிக்குப் பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மீண்டும் கூட்டாட்சி மரண தண்டனைகளை அமுல்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அமெரிக்க அரசாங்கத்தின் முன்னணி சட்டத்தரணியான மெர்ரிக் கார்லேண்ட் மரண தண்டனை தொடர்பான சட்டங்களை மீள்பரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தார்.
மரண தண்டனைகளை இடைநிறுத்தும் தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இருந்த இறுதி மாதத்தில் மாத்திரம் 13 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
“கூட்டாட்சி குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள அனைவருக்கும் அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் சட்டங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மக்கள் நீதியாகவும் மனிதாபிமானமாகவும் நடத்தப்படுவதை நீதித்துறை உறுதிப்படுத்த வேண்டும்” என்றும் மெர்ரிக் கார்லேண்ட் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க கூட்டாட்சி மரண தண்டனைப் பட்டியலில் 50 கைதிகள் இருப்பதாகவும், பைடன் ஆட்சியில் ஒரு கைதிக்கேனும் மரண தண்டனை வழங்கப்படவில்லை என்றும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.