அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகளுக்கு ஆப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படைத் தளம் மையமாக விளங்கியது.
அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேரியதையடுத்து ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு படையினரிடம் பாக்ராம் விமானப்படை தளம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி உலகையே உலுக்கிய நியூயோர்க் இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதலுக்கு பலி தீர்ப்பதற்காக அமெரிக்காவும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளும் (நேட்டோ ) தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானில் குவித்தன.
அமெரிக்க படைகள் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்ற தோடு, ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட்டன.
கடந்த 20 ஆண்டுகளாகமாக அமெரிக்க படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதல்களில் 2,488 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை நிபந்தனைகளின் அடிப்படையில் வெளியேற கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
செப்டம்பர் 11 க்குள் அமெரிக்கப் படைகள் அமெரிக்கா திரும்பும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சுமார் 2,500 – 3,500 அமெரிக்க படையினர் சமீப காலம் வரை ஆப்கானிஸ்தானில் இருப்பதாக கருதப்பட்டது.
அவர்களில் 1,000 க்கும் குறைவான அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலின் சர்வதேச விமான நிலையத்தை பாதுகாக்கும் பணியில் இருப்பார்கள் என கூறப்படுகின்றது.