தனது அலுவலகத்தில் வைத்து சக பணியாளருக்கு முத்தமிட்டதன் மூலம் சமூக இடைவெளி கட்டுப்பாட்டை மீறியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிட்டனின் சுகாதார துறை அமைச்சர் மாட் ஹான்கொக் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாட்டின் விதிமுறைகளை மீறியமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொவிட் பெருந் தொற்று காலத்தில் பெரும் தியாகங்களை செய்துள்ள நாட்டு மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளதாகவும் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மாட் ஹான்கொக் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 6 ஆம் திகதி தனது உதவியாளர் ஜீனா கொலடாங்கேலோவுடன் ஹான்கொக் நெருக்கமாக இருந்ததை காட்டும் படங்கள் பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து ஹான்கொக் உடனடியாக விலக வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் எம்.பி.க்கள் அழுத்தம் கொடுத்திருந்தனர்.
டுவிட்டரில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள மாட் ஹான்கொக், “சட்டங்களை உருவாக்குபவர்கள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனாலேயே பதவியில் இருந்து விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.
— Matt Hancock (@MattHancock) June 26, 2021