July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் இடிந்து விழுந்த 12 மாடிக் கட்டடம்: நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை!

அமெரிக்காவின் மியாமிக்கு வடக்கே 12 மாடிக் குடியிருப்பு கட்டடத் தொகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 102 பேர் வரையிலானோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 35 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். அவர்களில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

சுமார் 40 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம் அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது.

இந்த கட்டடம் இடிந்து விழுந்த போது குண்டு வெடிப்பது போன்ற பெரும் சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தை அடுத்து சம்பவ இடம்பெற்ற பகுதி தூசியால் புகை மண்டலம் போன்று காட்சி அளித்ததாக மற்றொருவர் விவரித்துள்ளார்.

 

விபத்தின் போது கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற சரியான விபரம் இதுவரை கணக்கிடப்படவில்லை.

எனினும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் சம்பவத்தில் காணாமல் போய் இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஜனாதிபதி ஜோ பைடன் புளோரிடாவில் அவசர அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

கட்டிடத்தின் அருகில் தங்களின் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஏராளமான மக்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.